இராமபிரான் இலங்கை செல்வதற்கு பாலம் அமைப்பதற்காக இத்தலத்திற்கு சுவாமியை வழிபட்டு ஆலோசனை கேட்டதால் உசாத்தானம் என்ற பெயர் ஏற்பட்டது. 'உசாவுதல்' என்றால் 'கேட்டல்' என்று பொருள். இராமபிரானும், சுவாமியும் மந்திராலோசனை செய்து இலங்கை செல்ல பாலம் கட்டியதால் இத்தலத்து மூலவருக்கு 'மந்திரபுரீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் 'மந்திரபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பாணம் சற்று வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் சிறிய லிங்க மூர்த்தி வடிவில் வெண்மை நிறமாகக் காட்சி அளிக்கின்றார். இராமபிரானுக்கு உபதேசம் செய்ததால் பாணம் சற்று சாய்ந்த நிலையில் உள்ளதாக ஐதீகம். கருடன் கொண்டு வந்த அமிர்த கலசத்தில் இருந்து ஒரு துளி மூலவர் மீது பட்டதால் அவர் வெண்மை நிறமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சுயம்பு மூர்த்தியாகையால் பச்சைக் கற்பூரம் சாத்தி வழிபடுகிறார்கள். அம்பிகை 'பெரிய நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.
பிரகாரத்தில் அறுபத்து மூவர், சப்த கன்னியர்கள், சூதவன விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், ஆதி பெரியநாயகி, சனீஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் நான்கு நடராஜர் உற்சவ மூர்த்திகள் உள்ளன. அதில் ஒரு மூர்த்தி மிகப் பெரிய வடிவம். மேலும் மேற்குப் பகுதியில் இராமபிரான், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், வருணன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
ஒருசமயம் இத்தலத்திற்கு வந்த விஸ்வாமித்திர முனிவருக்கு, சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் எண்ணம் எழுந்தது. அதனால் சுவாமி முனிவருக்கு இத்தலத்தில் நடராஜ தரிசனம் காட்டியருளினார். எனவே இத்தலம் 'ஆதி சிதம்பரம்' என்றும் 'கோவிலூர்' என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திற்கு 'கோயில்' என்னும் பெயர் உண்டு.
மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு 'சூதவனம்' என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தல விநாயகர் 'சூதவன விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.
இராமபிரான், இலட்சுமணன், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|